நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த குமாரபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கிவைத்தார்.
அதன்பின் திருச்செங்கோடு அரசு மருத்தவமனைக்கு திடீர் ஆய்வுமேற்கொண்டார். அமைச்சர் நேரடியாக மருத்துவமனைக்குள் சென்று புறநோயாளிகளாக வந்திருப்பவர்களிடம் மருத்துவமனை குறித்து கேட்டறிந்தார்.
அங்கிருந்த கர்ப்பிணி ஒருவரிடம் அரசு வழங்கும் சத்து பொருள்கள் அடங்கிய பெட்டி கிடைத்ததா எனவும் கேட்டறிந்தார். பின்னர் பிரசவ வார்டுக்கு சென்ற விஜய பாஸ்கர் அங்கு பிரசவித்து படுத்திருந்த பெண்களிடம் குழந்தையின் எடை குறித்தும் கேட்டார். குறைவான எடையாக இருந்தால் என்ன காரணம் எனவும் விசாரித்தார்.
பேறுகால நிதி உதவி, பரிசுப் பொருள்கள் கிடைக்கவில்லை என சில பெண்கள் கூறியதையடுத்து அமைச்சர் விஜய பாஸ்கர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்டார். இனிவரும் காலங்களில் அரசின் நலத் திட்டங்கள் உடனடியாக சென்றடைய வேண்டும் எனவும் அலுவலர்களிடம் வேண்டுகோள்விடுத்தார்.
பின்னர் பச்சிளங்குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுக்கு சென்ற அமைச்சர் அங்குள்ள இன்குபேட்டர் கருவிகளில் சிகிச்சைப் பெற்றுவரும் குழந்தைகளின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார். அமைச்சரின் திடீர் வருகையால் மருத்துவமனை வளாகம் பரபரப்பாகக் காணப்பட்டது.
இதையும் படியுங்க: ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து...!