நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100 கோழிப் பண்ணைகள் வரை உள்ளன. இங்கு 5 கோடி கோழிகள் மூலம், நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. தற்போது கோடை காலமாக இருப்பதாலும், பள்ளிகள் விடுமுறையாலும் முட்டைகள் பெருமளவு பண்ணைகளில் தேங்கி வருகின்றன. பிற மண்டலங்களைக் காட்டிலும், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அதிகமாக இருப்பதால், வியாபாரிகளும், பொதுமக்களும் வாங்குவதில் ஆர்வம்காட்ட மறுக்கின்றனர்.வியாபாரிகள் குறைந்த விலை கிடைக்கும் அண்டை மாநிலங்களை தேடி செல்கின்றனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அதிகப்படியான விலை வைப்பதாக கூறி, நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் என்ற ஒன்று உதயமானது. அவர்கள், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கும் விலையைக் காட்டிலும் 50 காசுகள் வரை குறைத்தே விலை நிர்ணயம் செய்கின்றனர். அவ்வாறு இருந்தும் வியாபாரிகள் முட்டைகளை வாங்க முன்வருவதில்லை. இதனால், நாமக்கல் மண்டலத்தில் மட்டும் சுமார் 12 கோடி அளவில் முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
இது தொடர்பாக, நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில், கடந்த ஒரு மாதமாக முட்டை விலையானது, அண்டை மாநிலத்திற்கும், நாமக்கல் மண்டலத்திற்கும் இடையே 70 காசுகள் வரை வித்தியாசம் உள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு சரியான விலையை நிர்ணயம் செய்வதில்லை. இதனால் நாமக்கல் கோழிப்பண்ணைகளை நாடி வந்த வியாபாரிகள், தற்போது ஆந்திரா, கர்நாடகாவிற்கு செல்கின்றனர்.
இது தொடர்பாக தேசிய முட்டை ஒருங்கிணபை்புக் குழு தலைவரான டாக்டர் செல்வராஜிடம் கேட்டால் சரியான பதில் இல்லை. இதனால் முட்டை விலையை குறைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கிய கோரிக்கை. முட்டை விலையை குறைத்தால்தான், ஒன்றிரண்டு வாங்கும் மக்கள், கூடுதலாக நான்கு, ஐந்து என வாங்குவர் என தெரிவித்தனர்.