நாமக்கல் நகராட்சி 15ஆவது வார்டு பவுண்டு தெருவில், கடந்த மூன்று மாதங்களாகவே முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதேபோல், கடந்த சில வாரங்களாகவே நகராட்சி சார்பில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலர்களிடம் சென்று புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்த நிலையில், நேற்று மீண்டும் திறக்கப்பட்ட குடிநீரானது, முன்புபோலவே கருமையான நிறத்துடனும் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் வந்ததுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, அதே பகுதியைச் சேர்ந்த நியாமத் பேசுகையில், தங்களது பகுதியில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து மாசடைந்த நிலையில் வருவது குறித்து நகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்திருந்த நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், இந்த குடிநீரை பருகுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் சாலை மறியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.