நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார். இவர் தனது மனைவி சாந்தி, மகள் சுஜிதா மற்றும் பேரக்குழந்தைகளுடன் கரூர் நோக்கி சென்றுள்ளார்.
இவர்கள் சென்ற கார் நாமக்கல் புறவழிச்சாலை நல்லிப்பாளையம் அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழி சாலை அருகில் உள்ள 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் ஏ.கே.பி.சின்ராஜ், அவரது மனைவி சாந்தி, மகள் சுஜிதா ஆகியோர் லேசான காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சிகிச்சை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பினர்.
இந்நிலையில், ஏ.கே.பி.சின்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் நலமாக உள்ளேன் என்றும் தனது குடும்பத்தினரும் நலமாக உள்ளதாகவும் தெரிவித்தார். காரில் சென்றபோது தனது கட்டுப்பாட்டை இழந்து தான் விபத்துக்குள்ளானது. கண்டிப்பாக வாக்களிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் ஏ.கே.பி.சின்ராஜை தொலைபேசி வாயிலாக அழைத்து நலம் விசாரித்தார்.