திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் கட்சியின் சார்பில் ஏ.கே.பி. சின்ராஜ் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை 8 மணி அளவில் சின்ராஜ் தன்னுடைய குடும்பத்துடன் நல்லிபாளையத்தில் இருந்து காரில் திண்டுக்கலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெரும் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் வேட்பாளர் சின்ராஜிக்கு சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து அறிந்ததும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு சின்ராஜை சந்தித்து உடல்நலம் விசாரித்தபின் செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன், வேட்பாளர் சின்ராஜ் நலமுடன் இருப்பதாகவும் இன்னும் சற்று நேரத்தில் வீடு திரும்ப உள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் இவ்வாறாக நடந்தது கண்திருஷ்டியாக எடுத்துக்கொள்ளலாம் என்றார்.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் வேட்பாளர் சின்ராஜிடம் நலன் விசாரித்தார் எனத் தெரியவந்துள்ளது.