நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த கைலாசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி சுப்பிரமணி, அவரது மனைவி மேனகா ஆகியோர் கந்துவட்டிக்காரர்கள் நெருக்கடியால் நஞ்சுண்டு கடந்த 21ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டனர்.
இதுதொடர்பாக நிதி நிறுவன ஊழியர்கள் இரண்டு பேரை திருச்செங்கோடு ஊரக காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். கந்துவட்டி, கடன் வசூல் போன்ற பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில் அதனைத் தடுக்கும் பொருட்டும் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்கும்விதமாக நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்புக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய ஆட்சியர் மெகராஜ், "நிதி நிறுவனங்கள் கடன் கொடுத்தால் அதைச் சட்டத்திற்குள்பட்டே வசூல் செய்திட வேண்டும், வசூலிக்க 100 வழிகள் உள்ளன. சட்டத்தை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.
மேலும் உயிர்கள் போகும் அளவிற்கு கடன் வசூலில் ஈடுபடுவதற்கு யார் அதிகாரம் அளித்தார் என ஆவேசமாக கேள்வி எழுப்பிய ஆட்சியர், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.