நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் படுகை அணையின் இடது கரையிலிருந்து உருவான இந்த வாய்க்காலானது சுமார் 79.04 கி.மீட்டர் வரை சென்று மோகனூரில் நிறைவடைகிறது.
இதில் ராஜவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால், மோகனூர் வாய்க்கால்கள் மூலம் 16143 ஏக்கர் வேளாண் நிலம் பயன்பெறுகின்றது.
இந்த வாய்க்கால்களின் கான்கிரீட் சுவர் கட்டவும், வாய்க்காலின் கரைகளைப் பலப்படுத்தவும், மதகுகள், மிகுதிநீர் போக்கி, மதகுகள் பழுதடைந்ததை சீரமைப்பதற்காக நீடித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின்கீழ் 184 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி கடந்த மே மாதம் 22ஆம் தேதி தொடங்கப்பட்டன.
இப்பணிகளை அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுசெய்து வருகின்றனர். இந்நிலையில் பரமத்தி வேலூர் அடுத்த நஞ்சை இடையார் பகுதியில் நடைபெற்றுவரும் ராஜவாய்க்கால் புனரமைப்பு பணியை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் இன்று (நவ. 5) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்குக்கு அறிவுத்தினார்.