நாமக்கல் - திருச்சி சாலையில் வேப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த ரோகித் மற்றும் அவரது நண்பர்களான அசேன், மணி ஆகிய 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள இந்திரா நகர் அருகே உள்ள வளைவில் சென்ற போது, நாமக்கல்லில் இருந்து வளையப்பட்டி நோக்கி செங்கல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ரோகித், அசேன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த மணியை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சேலம் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் நாமக்கல் மற்றும் பரமத்தி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நள்ளிரவில் பைக்ரேஸில் ஈடுபட்டதாகவும்; ஒரே இருசக்கர வாகனத்தில் ரோகித், அசேன் மற்றும் மணி ஆகியோர் சென்றதும் இவர்கள் யாரும் தலைக்கவசம் அணியாமல் சென்றதாலேயே தலையில் பலத்த காயம் அடைந்து இருவர் உயிரிழந்தது காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த அசேன் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தீபாவளி கூட்டத்தில் திருடும் கும்பல் கைது