நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. 40 விழுக்காடு கட்டுமான பணிகள் முடிவுற்ற நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மருத்துவக் கல்லூரியின் முகப்பு கட்டடம் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்நிலையில் திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தலைமையில் நாமக்கல் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் மருத்துவக் கல்லூரியின் கட்டடங்களின் உறுதித்தன்மையை கண்டறியும் வகையில் ஐஐடி வல்லுநர்கள் குழு அமைக்க அமைக்க வேண்டும். தற்போது கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் சத்தியமூர்த்தி & கோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்திட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், மேற்கண்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.