டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற இஸ்லாமிய மத மாநாட்டில் பங்கேற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களை நாமக்கல், இராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நோய் தொற்று உள்ளவர்கள் வசித்து வரும் நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட பாவடித் தெரு, மஜீத் தெரு, பிடில் முத்து சந்து, கடைவீதி உள்ளிட்ட 7 வீதிகள் அனைத்தும் தடுப்புகள் அமைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் நடைபெற்று வரும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணி, சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய மூன்று அரசு மருத்துவமனைகளோடு, மூன்று தனியார் மருத்துவமனைகளும் கோவிட்-19 மருத்துவமனைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு மற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் எவரும் பதற்றமடைய வேண்டாம், நோய் தொற்று பாதிப்புக்குள்ளான 18 பேரும் நலமுடன் உள்ளனர். அதே போல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் அரசு சார்பில் செய்து தரப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கரோனா வைரஸ்!