நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை வினைத்தீர்த்தபுரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கட்டப்பட்ட ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனைத்தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்கள் குறித்த முழு விபரங்களை அறியும் வகையில் 'தாய்மையுடன் நாம்' என்ற செயலியையும், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் புதிதாக 708 நகர்புற நல வாழ்வு மையங்கள் திறக்கப்பட உள்ளன. அதன்படி, நாமக்கல் நகராட்சியில் புதிதாக 7 நகர்புற நல வாழ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை, அரசியல் கட்சியினர் நேரிடையாக சம்மந்தப்பட்ட மாவட்ட மருந்து கிடங்குகளுக்கு சென்று இதுகுறித்து ஆய்வு நடத்தலாம். போதுமான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மருத்துவத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் 237 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டது. 1021 மருத்துவர்கள் நியமனம் செய்ய நேற்று மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விரைவில் மீதமுள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும். தமிழ்நாட்டில் மருத்துவ பணிகள் கழகத்தை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவிற்கே தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது. மருத்துவ பணிகள் கழகத்தை மூடுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு யார் சொன்னார்கள். அவர் இன்னமும் ஆட்சி கனவில் உள்ளார் எனத் தெரிவித்தார்.
பல்வேறு மாவட்டங்களில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை மத்திய அமைச்சர்களின் ஆய்வு செய்வது தொடரும் என்றார்.
இதையும் படிங்க:பரந்தூர் விமான நிலையப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு