சில நிறுவனங்களின் வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை மட்டுமே லாரிகளில் பொருத்த வேண்டும் என்பதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம், தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், மாநில டெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், லாரி உரிமையாளர்கள் நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த மனுவில், “லாரிகளுக்கு 49 நிறுவனங்களின் வேகக் கட்டுப்பாட்டு கருவியைப் பொருத்திட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை போக்குவரத்துத் துறை உடனடியாக அமல்படுத்த வேண்டும். லாரிகளுக்கு இரண்டு நிறுவனங்களின் ஒளிரும் பட்டைகளை (REFLCTED STICKER) மட்டுமே ஒட்ட வேண்டும் என்ற உத்தரவை ரத்துசெய்து 11 நிறுவனங்களின் ஒளிரும் பட்டைகளை ஒட்ட அனுமதிக்க வேண்டும்.
லாரிகளில் வாகனங்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் தடங்காட்டி (ஜிபிஎஸ்) கருவிகளை எட்டு நிறுவனங்களில் மட்டுமே பொருத்த வேண்டும் என்ற உத்தரவை கைவிட்டு 140 நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்த அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.