கனரக வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் அசோக் லைலேண்ட் நிறுவனமும் அப்போலோ டயர்ஸ் நிறுவனமும் இணைந்து நாமக்கல்லில் உள்ள லாரி ஓட்டுநர்களுக்கு உடல்நலம், சுகாதார வசதிகள் வழங்குவதற்கான சிறப்பு சுகாதார மையத்தை அமைத்துள்ளன. இதற்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இதில் அசோக் லைலேண்ட் நிறுவனத்தின் இயக்குனர் கோபால் மகாதேவன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு சுகாதார மையத்தை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் நாமக்கல் பகுதியில் லாரி உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து தொழில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதனால் இப்பகுதியில் அதிகளவிலான கனரக ஓட்டுநர்கள் உள்ளனர்.
எனவே இவர்களின் உடல்நலனை பேணிக்காக்கும் வகையிலும் அவர்களுக்கு போதிய மருத்துவச் சிகிச்சைகள் கிடைத்திடும் வகையிலும் மாதம் 20 ரூபாய் கட்டணத்தில் பல்வேறு வகையான நோய்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் சிகிச்சை அளிக்க இம்மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பாலியல் மூலம் பரவும் நோய் தொற்றுகளைத் தடுப்பது மட்டுமல்லாமல் பார்வை பராமரிப்பு, உயர் ரத்த அழுத்தம், காசநோய் உள்ளிட்ட பிற சேவைகளும் சுகாதார மையத்தில் வழங்கப்பட உள்ளதாகவும் பதிவு செய்துகொண்ட ஓட்டுநர்கள் இந்தியா முழுவதும் உள்ள இதுபோன்ற 31 சுகாதார மையங்களில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.