நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகேயுள்ள மாணிக்கவேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கெளரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் புகழ்வின் என்ற மகன் இருந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 9ஆம் தேதி மாலை வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் சுரேஷ் தனது மனைவி மற்றும் மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் சுரேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதையடுத்து மனைவி, மகனை கொலை செய்த குற்றத்திற்காக எருமப்பட்டி காவல்துறையினர் அவரைக் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மனைவி, குழந்தையை கொன்ற துக்கத்தில் இருந்த சுரேஷ் செப்டம்பர் 26ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், நேற்று மாலை தனது வீட்டின் அருகே இருந்த மின்கம்ப மின்சாரத்தை தன் உடலில் பாய்ச்சி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுரேஷ் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : நீர்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை!