நாமக்கல்: கொல்லிமலையில் கடைஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் அரசு சார்பில் 'வல்வில் ஓரி' விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டில் எதிர்வரும் ஆகஸ்ட் 3-ம் தேதியில் அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவின் போது அரசின் பல்துறை பணிவிளக்க கண்காட்சி, பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலர்க்கண்காட்சிகள், மூலிகைச்செடி கண்காட்சி ஆகியவை நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்காக 'நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் குடும்பத்துடன் கொல்லிமலைப் பகுதிக்கு வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளதால், எதிர்வரும், ஆகஸ்ட் 3-ம் தேதி (ஆடி மாதம் 18ஆம் நாள்) புதன் கிழமை நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்டு 27ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுவதாக' மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் வல்வில் ஓரி விழாவை ஒட்டி கொல்லிமலை செம்மேடு, சோளக்காடு, செங்கரை ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடைகளையும் ஆகஸ்ட் 1,2,3 ஆகிய 3 தினங்களுக்கும் மூட வேண்டும் எனவும், இவ்வுத்தரவை மீறி கடைகளை திறந்தாலோ, மது விற்பனை செய்தாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்.
முன்னதாக கொல்லிமலை இருக்கும் குறும்பொறை நாடு முழுவதையும் ஆண்டு வந்த ஓரி, யாழ் மீட்டும் பாணர்களுக்கு நாடு முழுவதையும் அளித்து தன் வள்ளல் தன்மையில் உச்சம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.