நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சமூக நலம், மருத்துவம் - ஊரக நலப்பணிகள் ஆகிய துறைகளின் சார்பில், கருவில் இருக்கும் குழந்தைகளின் பாலினம் அறிதல் தடைச் சட்டம், குழந்தைத் திருமண தடை மற்றும் பிரசவத்தின்போது தாய் உயிரிழப்பைத் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
இவற்றில் கலந்துகொண்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், பெண் குழந்தைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கொல்லிமலை செம்மேட்டில் தொடங்கி வைத்தார். இந்தப்பேரணியானது, கொல்லிமலை, செம்மேடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச்சென்று, வல்வில் ஓரி அரங்கத்தில் நிறைவடைந்தது.
இதில் 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம். படிக்க வைப்போம். தகுந்த ஊட்டச்சத்து உணவு அளிப்போம். திருமண வயதை கடைபிடிப்போம். பெண் குழந்தைகளை பேணிக்காப்போம்' உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டு, ஊர்வலமாகச் சென்றனர்.
இதில் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள், செவிலியர், மகளிர் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில், ஊரக நலப்பணிகள் பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள், அரசுத் துறை அலுவலர்கள் பலரும், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் அறிதல், தடைச் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கவுரை அளித்தனர்.
மேலும் பெண்களுக்கு உரிய வயதில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும், பிரசவத்தின் போது தாய்-சேய் இறப்பைத் தடுப்பது குறித்தும் மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கொல்லிமலையைச் சேர்ந்த பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் கலைக் குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில், பள்ளி-கல்லூரி மாணவ- மாணவிகள், மகளிர் குழுவினர், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி