நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த காவகாரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அம்சா. கணவனை இழந்த இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆன நிலையில், அவரது மகன் திருப்பூரில் பணியாற்றி வருகிறார். அம்சாவும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், விடுமுறை காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த அம்சா வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். வீடு பூட்டிக் கிடப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் எருமப்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் பார்த்தபொழுது அம்சா ரத்தவெள்ளத்தில் தரையில் சடலமாகவும் சடலத்திற்கு அருகே வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த எருமப்பட்டி காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, காவல்துறையின் விசாரணையில் திருப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் பணியாற்றிவந்த அம்சாவுக்கும், தன்னுடன் பணியாற்றிய கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அடிக்கடி காவகாரப்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு செல்வது வழக்கம்
இந்த நிலையில், அவர்கள் நேற்று இரவு தங்கியபோது அவருடன் தகராறு ஏற்பட்டு அவரை கழுத்தை நெரித்து தலை மற்றும் முகத்தில் குத்தி கொலை செய்துவிட்டு பிரகாசும் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது.