நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள காவேரி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். மாற்றுத்திறனாளியான இவர் கரூர் வைசியா வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு தனது ஆட்டோவின் பின்புறம் உள்ள இருக்கைக்கு அடியில் வைத்துள்ளார்.
பின்னர் அவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்போன் கடைக்குச் சென்றுள்ளார். தனசேகரன் சிறிது நேரம் கழித்து திரும்பிவந்து பார்த்தபோது அவரது ஆட்டோவில் வைத்திருந்த பணம் திருட்டு போனது.
இதுகுறித்து தனசேகரன் பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் செல்போன் கடையில் உள்ள கண்காணிப்புக் கேமிராவில் பதிவான காட்சிகளைப் பார்த்தனர்.
அப்போது சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தனசேகரனின் ஆட்டோ இருக்கையைத் தூக்கி, அதிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. தற்போது சிசிடிவி காட்சி அடிப்படையில் குற்றவாளியைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆம்பூரில் இருசக்கர வாகனத்தை திருடிய நபரை கைதுசெய்தது காவல் துறை!