நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேடு பெரியார்நகர் பகுதியை சேர்ந்த லோகநாதன் ஹைதராபாத்தில் மத்திய ரிசர்வ் காவலராக பணியாற்றி வருகிறார்.
லோகநாதன் - சுதா தம்பதியினரின் மகன் சசிதரன்(7). கரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமான பள்ளிகள் திறக்கப்படாததால் சசிதரன் திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே சிருநாவலூரில் உள்ள சுமதியின் தாயார் (பாட்டி) வீட்டிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு கோயில் திருவிழாவிற்காக சிருநாவலுருக்கு சசிதரனின் பெற்றோர் லோகநாதன், சுதாவும் சென்றுள்ளனர். கோயிலில் பட்டாசு வெடித்ததை சசிதரன் வேடிக்கை பார்த்துள்ளான்.
அப்போது வெடி ஒன்று சசிதரனின் நெஞ்சு பகுதியில் பட்டு வெடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவனை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இதனையடுத்து சொந்த ஊரான பரமத்தி வேலூருக்கு சசிதரன் உடலை அடக்கம் செய்ய பெற்றோர்கள், உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் காவல்துறையினர் பரமத்தி வேலூருக்கு விரைந்து வந்து அஞ்சலிக்காக வைத்திருந்த சசிதரனின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து சசிதரன் உடலை காவல்துறையினர் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.