நாமக்கல் மாவட்டத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலாகிருஷ்ணன் இன்று (பிப்.16) செய்தியாளர்களிடம் பேசியதாவது, ’சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைவாக உள்ள நிலையில், உலக நாடுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருகிறது.
இதனைக் குறைக்க கோரி தமிழ்நாடு முழுவதும் வரும் 17, 18, 19ஆம் தேதிகளில் சி.பி.எம் சார்பில் போராட்டம் நடைபெறும். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி ஐ.நா சபை மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இலங்கை போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
அதிமுக, பாஜக கூட்டணியை முறியடிக்க திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 3ஆவது அணி அமைவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை அமைந்தாலும் எவ்வித பயனும் இல்லை. மீண்டும் தீவிர அரசியலில் சசிகலா ஈடுபடுவதாக அறிவித்துள்ளது அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தவே வாய்ப்புள்ளது. இது திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
விவசாய விளை பொருட்கள் இடைத்தரகர்களிடம் செல்லும் போதுதான் விலை உயர்கிறது. இதனால் விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித பயனும் இல்லை. முதலமைச்சர் தேர்தலை மனதில் வைத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார். அது மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் அமைந்தால் அதனை சி.பி.எம் வரவேற்கும்.
பொது வாகனங்களுக்கு பல்வேறு வரிகளை வசூல் செய்து விட்டு சாலை பராமரிப்புக்கு என சுங்கக்கட்டணம், பாஸ் டேக் (FAS TAG) என பகல் கொள்ளை நடக்கிறது. ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு வட்டியில்லாமல் பல்லாயிரம் கோடி முதலீட்டை மத்திய அரசு ஏற்படுத்தி தருகிறது’ என்றார்.
இதையும் படிங்க:'மக்களை கசக்கிப் பிழியும் மத்திய அரசு' - விலையேற்றத்தை விவாதித்து வைகோ அறிக்கை