நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று (மே 11) ஒரே நாளில் சுமார் 372 நபர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் உள்ளிட்ட 9 அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்ஸிஜன் அல்லாத படுக்கை வசதிகள் மொத்தம் 263 உள்ளன. இதில் 78 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. இதேபோல் இந்த 9 அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள் 262 மட்டுமே உள்ள நிலையில், 13 படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன.
குறிப்பாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 144 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளில் 3 மட்டுமே காலியாக உள்ளன. மேலும், ஆக்ஸிஜன் அல்லாத 134 படுக்கை வசதிகளில் 49 படுக்கைகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள அவரச சிகிச்சைப் பிரிவினையும் கரோனா பிரிவாக மாற்றியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஆக்ஸிஜனுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்படவில்லை என்றாலும் இன்று அல்லது நாளை வரை மட்டுமே நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இருப்பு உள்ளதாகவும், தட்டுப்பாடுகள் ஏற்பாடாமல் இருக்க ஈரோட்டிலிருந்து ஆக்ஸிஜன் வரவழைக்க மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.