நாமக்கல் மக்களின் பிரதான கோரிக்கையான திருமணிமுத்தாறு திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
திருமணிமுத்தாறு திட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் காவிரி உபரி நீரை செத்தமலை வழியாக கால்வாய் வெட்டி திருமணிமுத்தாற்றில் உபரி நீராக விடவேண்டும் என்றும், நாமக்கல் மாவட்டத்தில் 32 ஆயிரம் ஏக்கர் நிலம் நீரின்றி விவசாயம் செய்ய இயலாத நிலையில் உள்ளது.
அதனால் உபரிநீரை திறந்துவிட்டால் விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும் எனவும், 2013ஆம் ஆண்டு திருமணிமுத்தாறு திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்த ரூ.1134 கோடி நிதியினை இத்திட்டத்திற்கு பயன்படுத்தி அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி இருச்சக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்றனர்.
எலச்சிப்பாளையம், இலுப்புலி, மாணிக்கம்பாளையம் வழியாக வந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. பின்னர் இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த பரப்புரை இருச்சக்கர வாகன பேரணியில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.