அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 1,00,008 வடைகளால் தொடுக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. மார்கழி மாதம் பனியினையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அமாவாசையன்று அனுமன் அவதரித்தார் என்பது நம்பிக்கை.
இந்த நாளை மக்கள் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இன்று(டிச.23) நாமக்கல்லில் வீற்றிருக்கும் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலைக்கு அதிகாலை 5 மணிக்கு 1,00,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டது. காலை 10 மணி வரை வடை மாலை ஆஞ்சநேயர் சிலைக்கு சாத்தப்பட்டிருக்கும்.
பின்னர் மஞ்சள், சந்தனம், பன்னீர், தயிர், பால், தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படும். பிற்பகல் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேய சிலைக்கு அலங்காரம் செய்யப்பட உள்ளது.
இரவு 10 மணி வரை பக்தர்கள் ஆஞ்சநேயர் சிலையை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட வடை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் சன்னதி முழுவதும் 2 டன் எடையுள்ள பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:கிறிஸ்துமஸ் பண்டிகை; 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்