தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு வருகின்ற 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இந்தத் தேர்தலில் போட்டியிடுவோர் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனிடையே உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான நேர்காணல் நாமக்கல்லில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்த நேர்காணலில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி "உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை கண்டு அதிமுக அஞ்சியதில்லை. தேர்தலைக் கண்டு ஐயம் கொண்டவர்கள் மட்டுமே தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அவர்களுக்கு தேர்தலில் வெற்றிபெற்று பதிலடி கொடுக்கப்படும்.
மின்துறையில் கேங்மேன் பணிக்கான தேர்வுகள் நியாமான முறையிலும் நேர்மையாகவும் நடைபெற்று வருகிறது. மழையின் காரணமாக ஒருசில மாவட்டங்களில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்று முதல் அந்த மாவட்டங்களிலும் தேர்வு நடைபெறும். கேங்மேன் பணிக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். அவ்வாறு ஏமாற்றமடைந்தால் அவர்களுக்கு அரசு பொறுப்பேற்காது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி. பாஸ்கர், சரஸ்வதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.