நாமக்கல் மாவட்டத்தில் ஆக்ஸிஜன், படுக்கை வசதிகளை அதிகப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி கோரிக்கை மனு அளித்தார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'கரோனா நோய்த் தொற்று அதிகமாக இருப்பதால், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகப்படுத்தி தர நாமக்கல் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் இருபது ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை இரு தினங்களில் அரசு மருத்துவமனைக்கு கொடுக்க உள்ளோம்.
மாவட்டத்தில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தேவையான அளவிற்கு இருப்பதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் படுக்கை இல்லை என பொதுமக்கள் தகவல் தெரிவித்தால், நாங்கள் உதவி செய்யத் தயாராக உள்ளோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் சேர்ந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். சுமார் இருபது லட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை வழங்க உள்ளோம்.
குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோரும் இணைந்து மக்களுக்காக செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், திருச்செங்கோடு பகுதியில் செயல்படும் அம்மா உணவகத்தில் உணவு வழங்குவது குறித்து திருச்செங்கோடு நகராட்சி ஆணையரிடம் கேட்க அவரைத் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் அலட்சியமாகப் பதிலளித்து எனது அழைப்பைத் துண்டித்து விட்டார். திருச்செங்கோடு ஆணையர் மக்கள் பிரதிநிதியை அவமானப்படுத்திவிட்டார். இதுகுறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளோம்' என்றார்.
இதையும் படிங்க : ஸ்டெர்லைட் ஆலை 2ஆம் அலகில் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்?