நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நடேசன்(33). இவர் குடும்பத்துடன் தனக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் வீடு கட்டி, விவசாயமும் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நடேசன் தனக்குக் குடிநீர் வசதிக்காக அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வீட்டிற்குக் குடிநீர் குழாய் அமைக்கக் குழி தோண்டியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரை குழி தோண்டக் கூடாது என மிரட்டி நடேசன் வீட்டிற்குச் செல்லும் பாதையில் கற்களைக் கொட்டி பாதையை மறித்துள்ளனர்.
இதனைக் கண்ட விவசாயி நடேசன், சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது இரு தரப்புனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த விவசாயி தான் தனது குடும்பத்தினருடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்வதாகக் கடிதம் ஒன்றினை எழுதி வாட்ஸ் அப்பில் தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
தகவலறிந்த காவல்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருத்தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு சமரசம் செய்து வைத்தனர். மேலும் வாட்ஸ் அப்பில் தற்கொலை கடிதத்தை அனுப்பிய நடேசனிடம் இனிமேல் இவ்வாறு செய்யக் கூடாது எனவும் எச்சரித்தனர்.
இதையும் படிங்க:ஃபேஸ்புக்கில் லைவ்-ஆக தற்கொலைக்கு முயன்ற இளைஞர்!