தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான திமுக கூட்டணியில், நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு அக்கட்சியின் சார்பில் சின்ராசு போட்டியிடுகிறார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்ட கோழி பண்ணையாளர்கள் மற்றும் முட்டை விற்பனையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு தேர்தலில் ஆதரவு அளிக்க கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரன், “மத்திய அரசு சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு வருகிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற வருமானவரித் துறையினர், அமலாக்கத் துறையினர், தேர்தல் ஆணையம் ஆகியவை தனிப்பட்ட முறையில் இயங்க அனுமதிப்பது இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் பிரசாரத்தை முடக்கும் நோக்குடன் நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் மிரட்டி வருகின்றனர். இதன்மூலம் அவர்கள் வெற்றி பெற முடியாது. அதிமுக - பாஜக கூட்டணியில் 40 தொகுதிகளிலும் தோற்பது உறுதி. இந்தியா முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசி வருகிறது” என்றார்.