நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ஐந்து ரூபாய் 25 காசிலிருந்து 25 காசு குறைத்து ஐந்து ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த மூன்றாம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை அதிகபட்சமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் விலை உயர்வால், முட்டை நுகர்வு வெகுவாக குறைந்தது.
இதையடுத்து, முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ஐந்து ரூபாய் 25 காசிலிருந்து இன்று ஒரேநாளில் 25 காசுகள் குறைக்கப்பட்டு ஐந்து ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும்போது, "புரட்டாசி மாதத் தொடக்கத்தில் முட்டை தேவை அதிகமாக இருந்ததால் முன் எப்போதும் இல்லாத அளவாக விலை அதிகம் நிர்ணயம் செய்யப்பட்டது.
சில்லறையில் முட்டை ஒன்றின் விலை 6 ரூபாய் முதல் 6 ரூபாய் 50 காசுகள் வரை விற்பனை செய்யப்பட்டதால் முட்டை விற்பனை குறைந்து, அதிகளவு தேக்கம் அடைந்தது.
இதனால், முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது. இவ்விலை வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தனர்.