நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில், தினசரி 3.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டைக்களுக்கான விலையை, நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தினசரி விலை நிர்ணயம் செய்து வருகிறது.
அதன்படி ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.4.05 காசுகளாக இருந்த நிலையில், இன்று(ஜன.25) திடீரென ஒரே நாளில் 25 காசுகள் குறைத்து ரூ.3.80 காசுகளாக விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த திடீர் விலை குறைப்பு குறித்து கோழிப் பண்ணையாளர்களிடம் கேட்ட போது பொதுவாக குளிர் காலத்தில் முட்டையின் தேவை, விற்பனை அதிகரிக்கும்.
ஆனால் இந்தாண்டு கேரளா உட்பட 9 மாநிலங்களில் பறவை காய்ச்சல் எதிரொலி காரணமாக, தமிழ்நாடு மட்டுமல்லாமல் வடமாநிலங்களிலும் முட்டையின் நுகர்வும், விற்பனையும் வெகுவாக குறைந்து வருகிறது. பிற மண்டலங்களில் முட்டையின் விலை குறைந்து வருவதால் தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் இல்லாத நிலையிலும் கூட வேறு வழியின்றி தமிழ்நாட்டிலும் முட்டை விலை குறைக்கப்படுகிறது. வரும் நாட்களிலும் முட்டை விலை மேலும் குறையும் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 1000 பறவைகள் உயிரிழப்பு!