நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் செல்வியை ஆதரித்து நாமக்கல் பூங்கா சாலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "எத்தனை தோல்விகள் வந்தாலும் எதிர் நீச்சல் போடும் கட்சி தேமுதிக. பாஜக, பாமகவுக்கு கொடுத்த மரியாதையை தேமுதிகவுக்கு அதிமுக கொடுக்காததால் கூட்டணியில் இருந்து வெளியேறியது. கடந்த 40 ஆண்டுகளாக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை செய்து வருபவர் விஜயகாந்த்.
எடப்பாடி பழனிசாமி காசு கொடுத்து மக்களையும் ஓட்டுக்களையும் விலைக்கு வாங்கி ஜெயிக்க நினைக்கிறார். ஆனால் அது ஒருபோதும் நிறைவேறாது. நூறுக்கும் சோறுக்கும் பீருக்கும் விலை போனால் உங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. மின்சாரக் கட்டணத்தை உயர்த்தவே இலவச வாஷிங் மெஷின் திட்டம். தண்ணீர் கொடுக்காமல் வாஷிங் மெஷின் கொடுத்து என்ன பயன்" எனத் தெரிவித்தார்.