நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சி, ஆலாம்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் வீடுகள் நெருக்கமாக இருப்பதாலும், அதிக அளவில் தறி மற்றும் விசைத்தறி கூடங்கள் இருப்பதாலும் கரோனா நோய்த்தொற்று பரவலாக அதிகரித்து வருகிறது. விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும்.
இப்பகுதிகளில் கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சி அலுவலகங்களில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் முன்னிலையில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் பேசியதாவது; "பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் வசிப்பிடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் நகராட்சி பணியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் கபசுரக் குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் ஆகியவற்றை வழங்குவதுடன் பொதுமக்கள் அவற்றை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நகராட்சியின் மூலம் காய்கறி விற்பனை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காய்கறிகள், பழங்கள், பால் விற்பனை, மருந்துகடைகள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், பொதுமக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியை கடைபிடிப்பது, முகக் கவசம் அணிவது உள்ளிட்ட அரசு அறிவுறுத்தியுள்ள நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் தவறாது பின்பற்ற வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி தென்படுபவர்கள் தாங்களாகவே சிகிச்சை மேற்கொள்ளாமல் அறிகுறி கண்ட உடனே அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அரசுத்துறை களப் பணியாளர்கள் அனைவரும் 10 நாட்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்" என்றார்.