நாமக்கல் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் சங்க சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பேசிய நல்லகண்ணு, "மத்தியில் ஆளும் பாஜக, 2ஆவது முறை ஆட்சிக்கு வந்தவுடன், பொறுப்பேற்ற 100 நாள்களில், 36 நாள்களில் மட்டும் 36 மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறது. முந்தைய ஆட்சிக் காலத்தில், போதிய பெரும்பான்மை இல்லாததால், தேவையற்ற திட்டங்களை செயல்படுத்த மத்தியில் ஆளும் இந்த அரசு முனைப்புக் காட்டவில்லை.
ஆனால், மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அறுதிப் பெரும்பான்மை இருந்ததால் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். புதிய மசோதாக்கள் மக்களுக்கு பயன்தரும் வகையில் இல்லை. அவை தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளன. கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் நாடு என்னவாகுமோ? என்ற கேள்வியும் எழுகிறது.
பாஜக அரசு 5 ஆண்டு திட்டத்தை ரத்து செய்து, நிதிஆயோக் என்பதை உருவாக்கியது. இதனால், புதிய திட்டங்கள் எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. 5 ஆண்டு திட்டங்கள் நிறுத்தப்பட்டது, நாட்டின் வளர்ச்சிக்கு தான் ஆபத்தாக மாறியுள்ளது. விவசாயிகள், சிறு தொழில் நிறுவனங்கள் ஆகியோரின் கடனை வசூலிக்க குண்டர்களை அனுப்பும் நிலை அதிகளவு ஏற்படும். எனவே, வங்கிகளை ஒருங்கிணைப்பதையோ தனியார் மயமாக்குவதையோ கைவிட வேண்டும்.
பாஜக ஆட்சியில் சரிவடைந்த பொருளாதாரத்தைப் பற்றி சிந்திக்க விடாமல், மதம், மொழி சச்சரவுகளை உருவாக்கி, மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இரண்டாம் சுதந்திரப் போர் தேவைப்படுகிறது. இதற்கு, மதசார்பற்ற கட்சிகளும், இடதுசாரி இயக்கங்களும், வெகுஜன மக்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்" என தெரிவித்தார்.