நாமக்கல் பொம்மைகுட்டை மேட்டில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நேற்று (ஜூலை 03) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு தலைமை உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், 'தனக்கு பள்ளிப்படிப்பைவிட அரசியல் படிப்பில் தான் அதிகம் ஆர்வம் இருந்தது. உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களின் உயிர் நாடி, மக்களுக்கு தொண்டாற்றுவதற்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
பெண்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது சாதாரணமானது அல்ல; பெரியார், அண்ணா, கலைஞர் போன்று உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். உங்களின் ஒரு கையெழுத்து மாபெரும் மாற்றத்தை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சி பெற வேண்டுமானால் அது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கையில் தான் உள்ளது.
தான் முதலமைச்சரான பிறகு தான் 10 ஆண்டுகளாக இருளில் இருந்த தமிழ்நாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மக்களின் தேவையை அறிந்து உழைக்க வேண்டும். அவர்கள் தேவை அறிந்தால் தான் உங்களுடன் மக்கள் வருவார்கள். இல்லையெனில், உங்களை மக்கள் வெறுத்துவிடுவார்கள்' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் கடமைகளை தயக்கமில்லாமல் செய்ய வேண்டும். அவற்றை தங்கள் கணவர்களிடம் கொடுத்துவிடாதீர்கள். ஒழுங்கீன செயலில் ஈடுபடுவோர் மீது கட்சி ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன். ஒழுங்கீனமும் முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன். இது உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் பொருந்தும்’ என எச்சரித்தார்.
இதையும் படிங்க: கேரளாவில் பாலியல் வழக்கில் ஜாமீன் பெற்ற பி.சி.ஜார்ஜ்: முதலமைச்சர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!