நாமக்கல்: திருச்செங்கோட்டில் அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிடி ஸ்கேன் கருவியை வழங்குதல் மற்றும் சீதாராம் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு விழா, கொக்கராயன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று (மே 28) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு திறந்து வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அப்போது பேசிய நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், 'அரசு மருத்துவமனைகளில் இல்லாத மருந்துகளை ஏழை மக்கள் வெளியில் வாங்கும் சூழல் சில இடங்களில் உள்ளதாக கூறினார். இந்த விபரங்களை மேலிடத்திற்கு தெரிவித்து எடுத்துக் கூறினால், எங்கு தங்களின் வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என தயங்குவதாக தெரிவித்தார். இதனிடையே, இத்தகைய குறைகளை எடுத்துக் கூறினால் மட்டுமே, அவற்றை அரசு திருத்திக்கொள்ள முடியும் என்றும் மாறாக இவற்றை மறைப்பதால் இவை தீராத குறைகளாகவே இருக்கும்' என்றும் அவர் தெரிவித்தார்.
இவைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறையைப் பொறுத்தவரை, குறைகள் என்பதே கிடையாது என பேசினார். பல்வேறு கட்டடங்கள் கட்டும் வகையில் ஏராளமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறிய அவர், மத்திய அரசு இன்று பல இன்னல்களை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு வைத்தார். அரசு மருத்துவமனைகளை பற்றி இப்படி பொதுவெளியில் மக்கள் பிரதிநிதியே இப்படி பேசலாமா? என்று கேள்வியெழுப்பினார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகவும், தானே நேரில் வரும் நிலையில், வேண்டுமெனில் தன்னுடன் வந்து நாடாளுமன்ற உறுப்பினரும் அதைப் பார்க்கலாம் என்றார். ஒருவேளை, அப்படி குறைகள் இருப்பின், அதிகாரிகள் மீது அங்கேயே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், 'பொத்தாம் பொதுவாக மற்றவர்களைப் போல் நீங்களும் சொல்வது என்பது ஏற்புடையது தானா? என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார். மருத்துவமனையில் இருந்து ஊழியர்கள் யாரும் குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என அரசு மருத்துவமனை குறித்து குற்றம் சாட்டும் விதமாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜின் பேச்சுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுக்கும் படியாக இவ்வாறு மேடையில் பேசினார். அரசு மருத்துவமனைகளின் நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினருக்கும், அதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் நடந்த இந்த காரசார விவாதம் அமைந்தது. இந்த நிலையில் இருவருக்குமிடையே நடந்த இந்த கருத்து மோதலால் அங்கு கூடியிருந்த அக்கட்சியினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் உரிமம் ரத்து; 550 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது எப்போது? - சி.விஜயபாஸ்கர் கேள்வி