நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளங்குழந்தைகள் விற்பனை செய்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான அமுதவள்ளி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை விசாரிப்பதற்கான இரண்டு நாள் அனுமதி நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அமுதவள்ளி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி 2019 மே 23ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தரகர்கள் பர்வீன், ஹசீனா என்ற நிஷா ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்த நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்திருந்தது. அதன்படி, சிபிசிஐடி சார்பில் ஐந்து நாள் விசாரிக்க அனுமதி கேட்டனர்.
இந்நிலையில், பர்வீன், ஹசீனா என்ற நிஷா ஆகிய இருவரையும் ஒரு நாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினருக்கு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அருள் சாமி, ஒட்டுநர் முருகேசன் ஆகிய இருவர் மீதான சிபிசிஐடி விசாரணை இன்றுடன் முடிவடைவதால் இன்று மாலைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.