நாமக்கல் மாவட்டம் ராசிபுத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலி அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பல ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆடியோ ஏப்ரல் 25ஆம் தேதி வெளியானது. இதன் அடிப்படையில் ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கின் முக்கியத்துவத்தினைக் கருத்தில்கொண்டு, இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் ஆய்வாளர் பிருந்தா உட்பட 10 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து, கைதான அனைவரையும் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இந்த வழக்கில் கைதான குழந்தை விற்பனை புரோக்கர்கள் அருள்சாமி, செல்வி, லீலா ஆகியோர் இன்று நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவின் மீதான விசாரணை நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.