நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில், திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நான்கு வழி சாலை சந்திப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், பொதுமக்களிடம் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
அப்போது பேசிய பெண்கள், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், நீட் தேர்வு, மது விலக்கு, காவிரி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவுகள், ஆகிய பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், “மதுவிலக்குத்துறை அமைச்சராக உள்ள தங்கமணி, மது ஆலைகளில் இருந்து பணம் பெறுவதால் மதுவிலக்குக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தரமற்ற நிலக்கரி வாங்கி 952 கோடி ரூபாய் வரை தங்கமணி ஊழல் செய்துள்ளார். சாய ஆலை நீர் பிரச்சினைக்கு அவர் இதுவரை பொது சுத்திகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக சார்பில் ஆளுநரிடம் வழங்கப்பட்ட அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் குறித்து அரசோ, அமைச்சர்களோ, இதுவரை எவ்வித விளக்கமும் மறுப்பும் தெரிவிக்காத நிலையில், வழக்கும் தொடுக்கவில்லை.
இந்தியாவில் மற்ற மாநிலங்கள் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டும், தன்னை காப்பாற்றி கொள்வதற்காக அச்சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். வரும் 27 ஆம் தேதி சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவதால், தன்னை காத்துக் கொள்வதற்காக பிரதமரையும், அமிதஷாவையும் அவர் இன்று சந்தித்திருக்கக் கூடும். சசிகலா வந்தபின் மீதமுள்ள 4 மாதமும் இந்த ஆட்சி நிலைத்திருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை: பழனிசாமி உறுதி