நாமக்கல்லில் "வெற்றி நடைபோடும் தமிழகம்" என்ற தலைப்பில் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டப் பேரவைத் தேர்தலின் பரப்புரையைத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று (டிச.30) தொடங்கி வைத்தார்.
இதையடுத்து நாமக்கல், ராசிபுரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட சட்டப் பேரவை தொகுதிகளுக்குச் சென்று வாக்குச் சேகரித்தார். இதைத் தொடர்ந்து, நாமக்கல் சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட குளக்கரை திடலில், அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்திற்கு நாமக்கல் மட்டுமில்லாமல் சேந்தமங்கலம், திருச்செங்கோடு, ராசிபுரம் ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
மோதி விபத்து
இந்தநிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்ற திருமலைப்பட்டியைச் சேர்ந்த 28 பேர் கூட்டம் முடிந்து, தாங்கள் வந்த சரக்கு ஆட்டோவில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். ஆட்டோவானது முதலைப்பட்டி அருகே சென்றுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆட்டோவில் சென்ற 28 பேரும், காரில் வந்த ஒருவர் என 29 பேர் காயமடைந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அனைவரையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழப்பு
இதையடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த திருமலைபட்டியைச் சேர்ந்த பழனியம்மாள் (55) என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்ரீபெரும்புதூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!