காற்று மாசை ஏற்படுத்தும் பி.எஸ். IV ரக வாகனங்களை 2020 மார்ச் 31ஆம் தேதிக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என, உச்ச நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி உத்தரவிட்டது. இதனையொட்டி இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களது பி.எஸ் IV ரக வாகன உற்பத்தியை படிப்படியாக குறைத்துக்கொண்டு அதற்கடுத்த ரகமான பி.எஸ் VI உற்பத்தியில் ஆர்வம் காட்டிவருகின்றன.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் பி.எஸ் IV ரக வாகனங்களின் பதிவிற்கு விதித்த கெடு இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மாநில போக்குவரத்து ஆணையர் ஜவஹர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், மார்ச் 31ஆம் தேதிக்கு மேல் பி.எஸ் IV ரக வாகனங்களை பதிவு செய்யக்கூடாது எனவும், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பி.எஸ் VI ரக வாகனங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனையொட்டி வாகன விற்பனையாளர்கள் தங்களிடம் இருப்பில் உள்ள பி.எஸ் IV ரக வாகனங்களை விற்பனை செய்து அதனை பதிவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:போராட்டங்கள் மூலம் நீதிமன்றத்தை நிர்பந்திப்பதா? - நீதிபதிகள் எச்சரிக்கை!