தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படவுள்ளன. பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான இலவச பாடப் புத்தகங்களை பள்ளிக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், வெண்ணந்தூர், சேந்தமங்கலம், முத்துகாபட்டி, காளப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் இன்று அனுப்பப்பட்டன. இதில் தமிழ் வழி பயிலும் மாணவர்கள், ஆங்கில வழி பயிலும் மாணவர்கள் என தனித்தனியாக புத்தகங்களை பிரித்து அனுப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து விரைவில் மாணவர்களுக்கு தேவையான இலவச சீருடை, புத்தகப் பைகள் அனுப்ப உள்ளதாக மாவட்ட கல்வித் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.