தமிழ்நாடு பாஜக துணை தலைவர் வி.பி. துரைசாமி நாமக்கல்லில் இன்று(மார்ச் 24) செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதற்கு காரணம் பிரதமரின் ஏழு ஆண்டு கால சிறப்பான ஆட்சியாகும். .
திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடி குறித்து தரம் தாழ்த்தி விமர்சனம் செய்வது கண்டிக்கதக்கது. பாஜக சொல்வதை தான் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்கிறார் என சிலர் கூறுவது உண்மை அல்ல. மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசு இணக்கமாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு தேவையான சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
கருர் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே பல நீதிமன்றங்களில் 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மணல் திருட்டை தடுக்கும் அலுவலர்களை கொலை செய்வேன் என பதவிக்கு வருவதற்கு முன்பே அவர் மிரட்டுகிறார். இது தான் திமுக வேட்பாளர்களின் நிலை.
திமுக தேர்தலில் அறிக்கையில் லஞ்ச ஊழல் அற்ற ஆட்சியை தருவோம், நில அபகரிப்பு செய்யமாட்டோம் என ஒரு இடத்தில் கூட இடம் பெறவில்லை. இதனை ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அளிப்பாரா?. இதுவரை அதிமுக அரசின் மீதோ, முதலமைச்சர் மீதோ தமிழ்நாடு மக்களிடம் எவ்வித அதிருப்தியும் இல்லை.
திமுக, தமிழர்களுக்கும், இந்து மதத்திற்கும் எதிரான கட்சி. எனவே தமிழ்நாடு மக்கள் திமுகவை புறக்கணிப்பார்கள் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஐநா சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்ததது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 7 ஆண்டுகளில் இலங்கை தமிழர்கள் நலனில் மோடி அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையில் மாட்டிறைச்சிக்கு தடை என கூறப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், அவ்வாறு இடம் பெற வாய்ப்பில்லை என்றும் அது குறித்து எனக்கு தெரியாது என மழுப்பலாக பதில் அளித்தார்.
இதையும் படிங்க: 'ஈழத்தமிழர்களுக்கு மத்திய அரசு பச்சைத் துரோகம்!'