சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பெருமளவு உயர் ரக கஞ்சா போதை பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் தனிப்படை அமைத்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அந்த விமானத்தில் ஒரு பெண் உட்பட 3 இந்திய பயணிகள் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளாக சென்று விட்டு திரும்பி வந்தனர். அவர்களை நிறுத்தி விசாரித்தனர். பின்னர் உடைமைகளை முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அவர்களது உடைமைகளில் பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 24 கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: தட்கல் முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க இதுதான் நடைமுறை... மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் பேட்டி!
அந்த 24 பாக்கெட்டுகளிலும் மொத்தம் 23.48 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.23.5 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பெண் உட்பட 3 பயணிகளையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து கஞ்சா பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இவர்கள் தாய்லாந்து நாட்டிலிருந்து யாருக்காக கஞ்சாவை கடத்தி வந்தார்கள்? யார் கொடுத்து அனுப்பியது? போன்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.