கால் வலி, வயிற்று வலி, சோர்வு, மன அழுத்தம், இரத்த போக்கு, வாந்தி போன்ற என்னற்ற பிரச்சனைகள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். இதில், மாதவிடாய் கறையும் தீர்க்க முடியாத பிரச்சனையாக உள்ளது. என்ன தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கவனமாக இருந்தாலும், சில சமயங்களில் துணிகளில் இரத்த கறை படிவதை தடுக்க இயலாத ஒன்று. இந்த கறைகளை அகற்றுவது சற்று கடினமாக இருந்தாலும், சில குறிப்புகள் மூலம் எளிமையாக அகற்றலாம்.
குளிர்ந்த நீர்: உள்ளாடை போன்ற எடை குறைந்த ஆடைகளில் இரத்த கறை பட்டால், அதனை நீக்க குளிர்ந்த நீர் சிறப்பாக செயல்படுகிறது. கறை படிந்த பகுதியை தண்ணீரில் நன்கு அலசி வெயிலில் உலர்த்தினால் கறை நீங்கிவிடும். இரத்த கறை படிந்த உடனே இந்த முறையை செய்தால் எளிதில் நீங்கும். இதுவே, கறை வறண்டு போனால் சிறிது நேரம் எடுக்கலாம்.
பேக்கிங் சோடா: மூன்று டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு டேபிள் ஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றவும். இப்போது, இந்த பேஸ்டை கறை படிந்த இடத்தில் தடவி ப்ரஸ் மூலம் மெதுவாக தேய்த்து 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து விடுங்கள்.பின்னர், துணியை குளிர்ந்த நீரில் அலசி வெயிலில் உலரவைத்தால் கறை நீங்கிவிடும்.
எலுமிச்சை சாறு: துணியில் உள்ள கறைகளை அகற்ற எலுமிச்சை நன்கு உதவும் என்பதை அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், கறை படிந்த இடத்தில் எலுமிச்சை சாற்றை தேய்த்து இயற்றையாக உலர விடவும். அடர்த்தியான அல்லது டார்க் நிற ஆடைகளில் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தும் போது நிறத்தை இழக்க வாய்ப்புள்ளதால், வெளிர் வண்ண ஆடைகளில் இந்த முறையை பயன்படுத்துங்கள்.
ஆஸ்பிரின்: ஆஸ்பிரினில் உள்ள சாலிசிலிக் அமிலம் இரத்தக் கறைகளை அகற்ற உதவும். அதற்கு, ஆஸ்பிரினை பொடியாகி, தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்யவும் இதை கறை படிந்த இடத்தில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி உலர்த்தவும்.
உப்பு மற்றும் தண்ணீர்: ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து, ரத்தக்கறை படிந்த இடத்தில் தடவி 2 மணி நேரத்திறகு ஊற வைக்கவும். பின்னர், துணியை சோப் பயன்படுத்தி தேய்த்து நீரில் கழுவினால் கறை நீங்கும்.
ஊறவையுங்கள்: கறை நன்கு வறண்டு போனால், துணிகளை குளிர்ந்த நீரில் 12 மணி நேரம் ஊற வைக்கவும். இது கடினமான கறைகளை தளர்த்துவதால், சோப் போட்டு கழுவினால் கறை நீங்கும்.
இதையும் படிங்க: எத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை Pad-ஐ மாற்ற வேண்டும்? மருத்துவர் விளக்கம்! - how often we should change pad
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்