தமிழ்நாடு சவரத்தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 9ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முடித்திருத்தும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு சவரத்தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் ராஜா கூறுகையில், "திண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டி கிராமத்தில் வசித்துவரும் சவரத்தொழிலாளி வெங்கடாசலம், ராஜலட்சுமி தம்பதியின் மகளான 12 வயதான சிறுமியை கடந்தாண்டு அவருடைய எதிர் வீட்டு சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி மின்சாரத்தை செலுத்தி படுகொலை செய்தான்.
இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன் கடந்த மாதம் மகளிர் நீதிமன்றத்தில் குற்றம் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்ற காரணத்தினால் விடுதலை செய்யப்பட்டான்.
எனவே, குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவனை கைதுசெய்ய வேண்டும். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் வருகின்ற 9ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள முடித்திருத்தும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" எனத் தெரிவித்தார்