தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மாவட்டந்தோறும் தீ தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நாமக்கல் தீயணைப்பு நிலையத்தின் சார்பில், நாமக்கல் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தீ விபத்துத் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிசந்திரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது. அதில், தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னுசாமி உள்ளிட்ட தீயணைப்பு படையினர் கலந்து கொண்டனர்.
தீயணைப்பு ஊர்தி, 7 குழுவினர்கள் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் இருந்து காத்துக் கொள்வது, வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, எண்ணெய் வகை தீயை அணைத்தல், சமையல் எரிவாயு சிலிண்டர்களால் ஏற்படும் தீயை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அணைத்தல் குறித்து நேரடி செயல்முறை விளக்கங்களை செய்து காட்டினர்.
மேலும் வெள்ளம், தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களை மீட்டதும் அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ உதவிகள் குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தும் முறை, வீடுகள், பொது இடங்கள் அலுவலகங்கள் ஆகியவற்றில் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் தீயணைப்பு துறையினர் விளக்கம் அளித்தனர். இதில் அரசு பள்ளியைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகும்படி இருக்கும் வளாகங்கள் கண்டறியப்பட்டால் சிறைதண்டனை!