நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள இருக்கூரைச் சேர்ந்த செந்தில்குமார், தியாகராஜன், ஆறுமுகம் மற்றும் சரவணன் ஆகியோர் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி இரவு அரசு மதுபானக் கடைக்கு சென்று மதுபானங்களை வாங்கி அருந்தியதாகக் கூறப்படுகிறது. இவர்கள் மதுவுடன் குளிர்பானம் கலந்து அருந்தியதை அடுத்து, மது அருந்திய சிறிது நேரத்திலேயே ஆறுமுகம் வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி செந்தில்குமாருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் கபிலர்மலை அரசு மருத்துவமனையிலும் தொடர்ந்து பரமத்திவேலூர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். எனினும் வலி குறையாமலும், அதன் தாக்கம் அதிகமாக இருந்ததால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும், தியாகராஜனும் கடும் வயிற்று வலி காரணமாக கடந்த மூன்றாம் தேதி அதே கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து செந்தில்குமாரின் மனைவி சத்யா அளித்த புகாரின் பேரில் பரமத்திவேலூர் காவல் துறையினர், மதுபானத்தில் குளிர்பானம் கலந்ததால் தான் பாதிக்கப்பட்டார்களா? கள்ளச் சாராயம் அருந்தினார்களா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாணவனை அடித்த ஆசிரியை: பள்ளிக்குப் பூட்டுபோட்டு போராட்டம்!