நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மனைவியை, பிரசவத்திற்காக சேர்த்தார். அங்கு பணியிலிருந்த செவிலி விஜயகுமாரி, அப்பெண்ணை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு குழந்தை உயிரிழந்தது.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது குடும்பத்தினருடன் ஆரம்ப சுகாதார நிலையம் வந்து, செவிலியிடம் தகராறில் ஈடுபட்டார். இரு மாதங்களுக்குப் பின், எழும்புலி எனும் கிராமத்திற்கு ஆய்வுக்குச் சென்ற செவிலி விஜயகுமாரி, தனக்குத் தெரிந்த நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் துரத்தி வந்த மணிகண்டன், விஜயகுமார் ஆகியோர், விஜயகுமாரி மீது ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பினர். பலத்த காயமடைந்த விஜயகுமாரியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் மணிகண்டன், விஜயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மகளிர் சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, 2020ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மணிகண்டனும், விஜயகுமாரும் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஆசிட் வீசினால் காயம் ஏற்படும் எனவும், மரணம் நிகழும் எனவும் தெரிந்தே இருவரும் செவிலி விஜயகுமாரி மீது ஆசிட் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கை காவல் துறையினர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகவும் கூறி, இருவருக்கும் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை உறுதி செய்து, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.