நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் சார்பில் கவாத்து ஆய்வு நிகழ்ச்சி காவல் துறை மேற்கு மண்டல தலைவர் பெரியய்யா தலைமையில் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் வஜ்ரா, வருண் வாகனங்களின் செயல்பாடுகள் குறித்தும் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் குறித்தும் பெரியய்யா ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரியய்யா, "கோவை மண்டலத்தில் 46 சோதனைச் சாவடிகள் உள்ளன. எனவே, நக்சலைட்டுகள் ஊடுருவ வாய்ப்பில்லை. நக்சலைட்டுகள் ஊடுருவ வாய்ப்புள்ள கிராமங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். அங்கு வசிக்கும் பொதுமக்களும் காவல் துறையினருக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.
மேலும், பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நல்லுறவு இருப்பதால், இதுவரை எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. காவலன் எஸ்.ஒ.எஸ். செயலி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெண்கள் ஏதேனும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதை உணர்ந்தால் உடனடியாக இந்தச் செயலி மூலம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கலாம்.
கோவை மண்டலத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டைவிட இந்தாண்டு 23 விழுக்காடு வரை சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்கு முழுமுதற்காரணம் பொதுமக்கள் தலைக்கவசம் அணிவதுதான். வரும் ஆண்டுகளில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மேலும் குறையும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் காவலன் எஸ். ஓ. எஸ் செயலி விழிப்புணர்வு!