ஆவின் பால் ஒப்பந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் சுப்பிரமணி பேசுகையில், "தமிழ்நாட்டில் உள்ள 10 ஆவின் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் டேங்கர் லாரிகளை இயக்கிவருகின்றன.
கடந்த 2016 - 18ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் இதுவரை புதிய ஒப்பந்தம் போடப்படவில்லை. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி புதிய ஒப்பந்தத்திற்கான ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போதுவரை இறுதி செய்யாமல் கிடப்பில் வைத்துள்ளனர்.
இதன் காரணமாக தாங்கள் பாதிக்கப்படுகிறோம். அத்தோடு கடந்த ஐந்து மாதங்களாக ஆவின் நிறுவனம் வழங்க வேண்டிய 10 கோடி ரூபாய் வாடகை பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வரும் 16ஆம் தேதி காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் 270-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் இயக்கப்படாது எனவும் இதனால் ஆவின் நிறுவனங்களுக்கு தினசரி எடுத்து செல்லப்படும் 30 லட்சம் லிட்டர் பால் தேக்கமடையும் என்ற அவர், தமிழ்நாடு அரசு உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: லாரிகள் வேலை நிறுத்தம்: அரசுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் இழப்பு