நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூரில் வசித்துவருபவர் ரமிலா(26). இவர் குடும்ப தகராறு காரணமாக தனது கணவர் கார்த்திகேயனை பிரிந்து பெற்றோருடன் வசித்துவருகிறார். இவரது ஒன்றரை வயது மகன் சர்வேஸ்வரனுக்கு கடந்த நவம்பர் 15ஆம் தேதியன்று சளி பிடித்திருக்கவே திருச்செங்கோடு உழவர் சந்தை எதிரில் உள்ள தாமரை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் தாமரைக் கண்ணனிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர் தாமரைக் கண்ணன் ஊசி போட பரிந்துரைத்துள்ளார். அதன்படி மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் செவிலியர்கள் சரளா, இந்துமதி ஆகியோர் குழந்தையின் இடது பக்கத்தில் ஊசி போட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஊசி உடைந்து போயுள்ளது. இது குறித்து சரளாவும் இந்துமதியும் மருத்துவரிடம் கூறியபோது ஊசி உடைந்து வெளியே விழுந்ததோ? உள்ளேயே தங்கி விட்டதோ? என தெரியவில்லை. எனவே இதனை பெரிதுப்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுங்கள் என கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால் குழந்தை தொடர்நது அழுது கொண்டிருக்கவே நவம்பர் 29ஆம் தேதி பரிசோதனைக்காக அழைத்த வந்தபோதும் ரமிலாவிடம் ஊசி உடைந்தது குறித்து யாரும் தகவல் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் சுமார் 40 நாட்களாக உடைந்து போன ஊசி உடலுக்குள்ளேயே இருக்க வலியால் அவதிப்பட்டு வந்த குழந்தை சர்வேஸ்வரன் அழுதபடியே இருந்துள்ளார்.
நேற்று மாலை ஊசி போட்ட இடத்தின் அருகே கட்டி போல தென்படவே ஏதோ பூச்சி கடித்து இருக்கலாம் என கருதிய ரமிலா, இன்று காலை கட்டியை அழுத்தி பார்த்த போது சீலுடன் உடைந்துபோன ஊசியின் நுனி வெளிப்பட்டதை கண்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக குழந்தையை எடுத்துக்கொண்டு உறவினர்களுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார் ரமிலா.
மருத்துவமனையில் இதுகுறித்து கேட்டபோது உடைந்தது தங்களுக்கு தெரியும். வெளியே விழுந்து இருக்கலாம் என கருதி விட்டுவிட்டோம். வேண்டுமென்றால் தற்போது சிகிச்சையளிக்கிறோம். வழக்கு எதுவும் தொடுக்க வேண்டாம் பணம் கொடுப்பதாகக் கூறி பேரம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அம்பேத்கரின் சிலை அவமதிப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்